No comments yet

நவராத்திரி விரதம்

சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் ஆதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

விரதகாலம்
நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தி தேவியைக் குறித்து நோற்கப்படும்விரதமாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமியில் முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

தொன்ம நம்பிக்கை
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைஉண்டாக்க விரும்பியபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா
= செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்கதைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

Post a comment