No comments yet

அபிராமி பட்டர் விழா 31.01.2022

அம்பிகை அடியார்களே
இச்சிறப்பு மிக்க அபிராமிபட்டர் விழா துர்க்கை அம்மன் ஆலயத்தில் 31.01.2022 திங்கட்கிழமை மாலை 17:00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாக துர்க்கை அம்மன் திருவருள் கைகூடியுள்ளது. அமாவாசை நாளன்று வருகை தந்து நடைபெறும் அபிசேகம், பூசை, ஊஞ்சல் பாட்டு நிகழ்விலும் கலந்து சிறப்பித்து தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்தித்து இஸ்டசித்திகளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டிக் கொள்கின்றோம்.

தை அமாவாசை விரதமும்… அபிராமி பட்டரின் பக்தியும்…
அபிராமி பட்டர் என்று பின்னாளில் அறியப்பட்ட சுப்பிரமணியன் என்ற அந்தணர், அபிராமி அம்மையின் மேல் மிகவும் பக்தி கொண்டு இருந்தார். அவர் சமய தத்துவ சாத்திரங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் இவர் பட்டர் என்று அழைக்கப்பட்டார். அவர் தமிழ் மற்றும் வடமொழி இண்டிலும் வல்லவராகவும் விளங்கினார். அவருக்கு பார்க்கும் இடமெல்லாம் எம் அம்மையின் வடிவாகவே தோன்றியது.🌹
ஒரு முறை சரபோஜி மன்னர், தை அமாவாசையன்று திருக்கடவூர் கோயிலுக்கு வந்தார். நிஷ்டையிலிருந்த பக்தரை நோக்கி ‘இன்று என்ன திதி?` என்று கேட்டார். அன்னையின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர், தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். உடனே அரசன் அது “மதி கெட்ட தினம்” (சந்திரன் தோன்றாத தினம் அதாவது அமாவாசை, சுப்ரமணியருக்கு அறிவு கெட்ட தினம்) என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை காட்டக் கூடுமோ? என்றார். பட்டரும் அதற்கு உடன்பட்டார். பட்டரின் இந்த கூற்றினால் கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு முழு நிலவு தோன்றவில்லை என்றால் உமக்கு சிரச்சேதம் என்று கட்டளையிட்டார். அன்னையின் அருளின் மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்த பட்டர் அசரவில்லை.🌹
திருக்கடவூர் இறைவியாகிய அபிராமியின் அருள் விளையாடலோ அதியற்புதமான விளையாடல். தன்னையே, தான் வேறு தன் பக்தன் வேறல்ல என்று உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள். அரசரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அதில் அமர்ந்து அபிராமி அந்தாதியை கள்ள வாரண பிள்ளையாரைக் காப்புக்கு அழைத்து தொடங்கினார் . 🌹
அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். 🌹
இவ்வாறு அந்தாதியாக அமைந்த ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறை சிப்பாய்கள் அறுத்தனர். 100வது பாடல் முடிந்ததும் நிலவு வராவிட்டால், நூறு கயிறும் அறுக்கப் படும். பட்டரும் அடியில் எரியும் தீயில் விழுந்து உயிரை இழக்க வேண்டும். 🌹
அம்பாளின் திருவுளம் துணை நிற்க ஒவ்வொரு பாடலாகப் பாடிக் கொண்டிருக்கையில் நிலவு தோன்றுவதாயில்லை. பட்டரும் ஏக்கத்துடன் நான் அவள் நினைவிலேயே அவ்விதம் சொன்னேன். காக்கவேண்டிய அவளே கண்ணை மூடிக்கொண்டிருக்க, நான் உன்னிடம் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது என தன் அகத்தையே குறை கூறிக்கொள்பவர் பலவாறாக அவள் நாமங்களைப் பாடுவார். அவள் கண் திறந்தால் நடக்காதது எதுவும் இல்லை என்பதை 78-வது பாடலில்,🌹
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?”*🌹
என்று அவளது கடைக்கண் பெருமையைக் கூறி, 79-வது பாடலில் பாடலைத் தொடர்ந்து முடிக்க அன்னை அபிராமி தன் மகன் அபிராமிபட்டருக்காக நிலவை வானில் தவழவிட்டாள். அதன் பின்னர் அந்தாதியைத் தொடர்ந்து 100 பாடல்கள் பாடி முடித்தார் பட்டர். தன் தாடங்கத்தை நிலவாக்கி வானவீதியில் தவழவிட்டு, ‘பக்தனின் வாய்மொழி மெய்மொழியே’ என மெய்ப்பித்து பக்தனை அபிராமிபட்டராக்கினாள் அன்னை. அவளையே தவம் செய்த அபிராமிபட்டருக்கு அருள்மழை பொழிந்தாள்.🌹
இந்நிகழ்வு இடம்பெற்றது தை மாத அமாவாசை திதியிலாகும்

Post a comment