சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய் சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிற்சலாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்தில் முதன் முதலில் ஆகமரீதியான வழிபாட்டு முறைகளுடன் கூடிய சைவ ஆலயங்களில் ஒன்றாக அமையப் பெற்றது. புலம்பெயர்ந்து வாழும் எமது தலைமுறை, அடுத்த தலைமுறைச் சந்ததி மத்தியில் இறைபக்தி உணர்வையும், கலை கலாச்சார விழுமியங்கள் பேணலையும் ,பல்சமய மக்களின் மன அமைதிக்கான திருவாராதனை ஆலயமாகவும் அனைவரையும் ஒன்றிணைத்து இயங்கி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை வழி வாழ்ந்தும் தலைமுறை கடந்தும் சைவப் பெருமக்களின் சன்மார்க்க இறை வழிபாட்டிடமாகவும், சைவசமய பரம்பரையின் சாட்சியமாகவும் விளங்கவிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் 2080 சதுர மீற்றர் பரப்பளவில் இன்வில் என்னும் கிராமத்தில் நிரந்தர திருத்தலமாக அமைவதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளது. சைவ சமயத்தவர்களின் சிவநெறி வேத, ஆகம இறை வழிபாட்டிற்கும், மத்திய மாநில அடியவர்களது வருகைக்கும் ஏதுவாகவும், புறநிலைச்சூழல்கள் சாதகமான நிலைமையுடன் அமையப்பெறவுள்ள ஆலயத்தினை துர்க்கை அம்மன் ஆலயத்திற்காக சொந்தமாக்கிக் கொள்வதற்கு சுமார் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுகிறது.
ஊர் கூடித் தேர் இழுக்க வடம் பிடித்த பலமான இனமானத் தமிழர்களே!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று இந்தப் பெரும் திருப்பணியில் இணைந்து அடியவர்கள் ஒரு சதுர மீற்றர் இறைவியின் நிலத்திற்காக 3500.00 சுவிஸ் பிராங்குகளை தாங்களும், தங்களின் பிள்ளைகளின் பெயராலும் திருப்பணிக்கு நன்கொடையாக வழங்குவதன் மூலம் இம் மண்ணில் வாழும் எமது எதிர்காலச் சந்ததியினரின் நன்நெறி வாழ்விற்கு உங்கள் பங்களிப்பு நிச்சயம் காத்திரமான அங்கம் வகிக்கும்.
“துர்க்கா-வளாகம் இன்வில்” அம்மன் ஆலயத்தின் பட்டையத்தில் தங்களால் உறுதிப்படுத்தப்படும் பெயர் பதியப்பட்டு திருப்பணி தொண்டின் மகிமையை சந்ததி கடந்தும் வரலாற்றில் நினைவில் கொள்ளப்படும்.
திருக்கோவில் திருப்பணிகள் சட்ட ஒழுங்கு வரைமுறைக்கமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் தங்களது திருப்பணி நிதியினை முடிந்தவரை ஒரே தடவையில் தந்துதவுமாறு கோருகின்றோம். அவ்வாறு ஒரே தடவையில் தரமுடியாவிடத்தில், முதற்தடவையாக குறைந்தது 1000.00 சுவிஸ் பிராங்குகளையும் அடுத்தடுத்த மாதங்களில் குறைந்தது 6 மாதத்திற்குள் மிகுதியாகவுள்ளதையும் உரிய காலப்பகுதியில் செலுத்திட வேண்டுகின்றோம். நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட சதுர மீற்றர் இறைவியின் நிலத்திற்காக பங்களிப்பை செய்ய விரும்பின் ஆலய நிர்வாக சபையினரிடமோ அல்லது இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள திருப்பணிக் குழுவினரிடம் தெரியப்படுத்தலாம்.
துர்க்கை அம்மனின் அருளாசியுடன் அனைத்து நலனும் பெற்று உங்கள் சந்ததிகளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்கின்றோம்.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.”
ஆலய திருப்பணிக்குழு
லுட்சேர்ன் அம்மன் கோவில்
16.04.2024